மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து கட்சியினரும் தேர்தல் களத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவருக்கு ஒருவர் தங்களது எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி வருகின்றனர். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என குற்றம்சாட்டினார். இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், ‘ராஜீவ் காந்தி போன்ற நல்ல பிரதமரை குற்றம்சாட்டுவது, பிரதமர் மோடி செய்த ரஃபேல் ஊழலை மறைக்கவே. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மோடி என்ன வேண்டும் என்றாலும் செய்வார்’ என தெரிவித்தார்.