பிரதமர் நரேந்திர மோடி 63ஆவது பதிப்பான மனதில் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு பூட்டப்பட்டுள்ள (லாக் டவுன்) நிலையில், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மக்கள் உண்மையான ஹீரோக்கள்.
ஏனென்றால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். கரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில், சமூகத்தில் உண்மையான ஹீரோக்களுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் பல வீரர்கள் உள்ளனர். குறிப்பாக செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் என கடமையில் இருக்கும் எங்களின் சகோதர சகோதரிகள். அரசாங்கம் வங்கி சேவைகளை திறந்து வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மேலும் வங்கித் துறையில் பணிபுரிபவர்கள் உங்கள் சேவையில் இருக்கிறார்கள். முழு அர்ப்பணிப்புடனும் நம்மளை வழிநடத்துகிறார்கள். இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து மளிகை பொருட்களை வழங்குகின்றன.
சற்று யோசித்துப் பாருங்கள் பூட்டுதலின் போது நீங்கள் டிவியைப் பார்க்கும்போது, தொலைபேசி, இணையம் மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றை பயன்படுத்தும்போது கூட இந்தச் சேவைகள் தடையின்றி தொடருவதை உறுதிசெய்ய கடுமையாக உழைக்கிறார்கள்.
நாட்டில் தொடர்ந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுங்கள்.
நமது முன்னணி வீரர்களான செவிலியர்கள் மற்றும் கரோனா வைரஸுடன் போராடும் மருத்துவர்கள் ஆகியோரிடமிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும்.
எங்கள் மருத்துவர்களின் தியாகம், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காணும்போது உத்வேகம் கிடைக்கிறது.
கரோனா வைரஸூக்கு எதிரான போர் கடுமையான ஒன்றாகும். இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை” என்றார்.