இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வரும் சூழலில், லடாக் யூனியன் பிரதேசத்தையொட்டியுள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இருதரப்பினரும் தங்களது ராணுவத்தைக் குவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, வெளியுறவுத் துறை உயர்மட்ட அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்பது குறித்து மோடி கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலையில். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் படைகளின் தளபதிகள் ஆகியோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மேற்கொண்ட கூட்டத்தில், லடாக்கில் நிலவிவரும் சூழல் குறித்தும் அடுத்தகட்டமாக இந்திய ராணுவம் என்ன செய்ய முடிவெடுத்துள்ளது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, சீன-இந்திய ராணுவத்தினர் இடையே ஐந்து கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்கோங் சோ செக்டர், கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அதன் ராணுவத்தைக் குவித்துள்ளதுள்ள சூழலில் அதனை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இதுதவிர, லடாக்கின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள டிரிக் ஹைட்ஸ், டெம்சோக், சும்மார் ஆகிய பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஒரு வயது குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல்துறை!