ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நீக்கியது. இதையடுத்து அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் ஜம்மு-காஷ்மீரில் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை. கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இது பொருத்தமற்றவை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்குரைஞர் துஷார் மேக்தா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அந்த விளக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 அமலில் இருந்த போது இந்திய சட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் பயனற்றதாக இருந்தது. அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டமும் அடங்கும்.
தற்போது இந்த சட்டங்கள் அங்கும் பொருந்தும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு மற்றொரு தேதியில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான துணைநிலை ஆளுநர்கள் பதவியேற்பு!