இது தொடர்பாக வழக்குரைஞர் அமிர்த்பால் சிங் கல்சா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த காலங்களில் தலைமை நீதிபதிகளை குறிவைத்து அரசியல் செய்யும் ஒரு குழாம் இருந்துவருகிறது. அதன் நிறுவன உறுப்பினர்களில் பூஷனும் ஒருவர். அந்த குழுவானது உச்ச நீதிமன்றத்தின் மீது தங்களது தாக்கத்தை செலுத்தி, அதன் ஸ்திரத் தன்மையை குலைக்கும்.
நீதிமன்றத்தில் இருந்து தங்களுக்கு சாதகமான உத்தரவுகள் கிடைக்காதபோது விமர்சிப்பதை அந்த குழுவானது தங்களது நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்பிற்குள்ளாக்கி இருக்கும் பிரசாந்த் பூஷனின் செயல்பாடுகள் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அமர்வை பொருத்தவரை கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வழக்கு பெரும் தாக்கம் செலுத்தும்.
மிகவும் பரபரப்பான வழக்குகளில் ஒன்றான இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதிலிருந்து தங்களது நிறுவனங்களில் புகழுக்காகவும், விளம்பரத்திற்காகவும் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூத்த வழக்குரைஞர் பூஷனை தங்கள் செய்திகளில் மிகைப்படுத்தி எழுதியும், பேசியும் வருகின்றன. எனவே, வழக்கின் வாதங்களை நேரடியாக ஒளிபரப்பவும், காணொலியாக பதிவு செய்யவும் வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைமை நீதிபதிகள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் பதிவிட்டிருந்த கருத்துக்கு எதிராக அவர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் பூஷனை் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.