கரோனா ஊரடங்கால் காயமடைந்த, உயிரிழந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ரீபாக் கன்சால் என்னும் வழக்கறிஞர் தாக்கல் செய்த இந்த மனுவில், "இந்த கரோனா ஊரடங்கால், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது காவல் துறை, பாதுகாப்பு முகமைகள் நிகழ்த்தும் அட்டூழியங்களில் இருந்து காப்பாற்றவேண்டும். சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழப்பு, காயமடைவதை செய்திகளின் வாயிலாக காண்பதன் மூலம் அவர்களின் பிரச்னைகள் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
காயமடைந்த, உயிரிழந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுவதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னை என்பது இந்தியாவிற்கு தனித்துவமானதல்ல. ஆனால், முன்னேற்பாடு இல்லாத இந்த நாடு தழுவிய ஊரடங்கினால் அவர்கள் வேலையிழந்து உணவில்லாமல் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டின் படி இடம்பெயர்ந்தோர், பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தல், பட்டினி போன்றவற்றைத் தடுக்க எந்தவொரு சமூக பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.
இடம்பெயர்ந்தோர் கொரோனா வைரஸின் தொற்றுநோயை விட அதிகமாக உணவு மற்றும் தங்குமிடமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுப்ரமணியன் சுவாமியின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு: ஐ.நா சிறப்பு ஆலோசகர் கண்டனம்