கொச்சி: கேரளாவில் உள்ள தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும் வகையில், இந்தியாவின் முதல் தொழில் பாதுகாப்பு சுகாதாரப் பயிற்சி மையத்தை கேரள அரசு கொச்சியில் உருவாக்கியுள்ளது.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இதன் திறப்பு விழாவிற்கு தொழிலாளர், திறன் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய பினராயி விஜயன், “கேரளாவில் உள்ள தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும் வகையில் இந்த தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையம் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நோக்கில் அரசாங்கம் இதனை உருவாக்கியுள்ளது. அரசின் இந்த முயற்சி ஆபத்து இல்லாத மற்றும் தொழில்சார் நோயற்ற சமூகத்தை உருவாக்க உதவும்” என்று கூறினார்.
ரூ. 14.4 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி மையம், இந்தியாவில் ஒரு மாநில அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் தொழில் பாதுகாப்பு சுகாதாரப் பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது.