பிகார் மாநிலத்தில் பல முக்கிய பகுதிகளில் கடுமையாக மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் பெரும் துன்பத்தில் தவித்துவரும் சூழலில், ஒருநாள் ஃபேஷன் கல்லூரி மாணவியான அதிதி சிங், அவரது நண்பரை அழைத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிக்குள் சென்றுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உதவ வந்திருப்பார்கள் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தபோது, கேமராவை வெளியே எடுத்து ஃபோட்டாஷூட்டை தொடங்கிவிட்டார்கள். இந்த புகைப்படங்களை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட, அது சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவியது. மக்கள் பெரும் துயரத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது ஃபோட்டோஷூட் நடத்திய இவர்களை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் சவுரராவ் அஹுஜா, "நாட்டின் மற்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் ஓடிச்சென்று உதவுபவர்கள் பிகாரின் இந்த பெரும் வெள்ளத்திற்கு உதவ முன்வரவில்லை. இந்த வெள்ளத்தின் கோரத்தை விளக்கும் வகையில் நீங்கள் புகைப்படத்தைப் பதிவிட்டாலும் மக்கள் உதவமாட்டார்கள். மக்களும் ஊடகங்களும் பிகார் வெள்ளம் குறித்து பேசவேண்டும் என்பதற்காகவே நான் இந்த ஃபோட்டோஷூட்டை செய்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.