கரோனா வைரஸை தடுக்க கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் மருந்தை மனிதர்கள் மீது செலுத்தும் முதற்கட்ட பரிசோதனையானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸின் சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியரும் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், " 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர்.அதில், குறைந்தபட்சம் 22 பேருக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம் . அதன்படி, இன்று டெல்லியை சேர்ந்த 30 வயதான நபருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது.இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அவர் தொடர்ச்சியாக 7 நாள்கள் கண்காணிக்கப்படுவார். மேலும், பலருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கவுள்ளோம்." என்றார்.
மேலும் அவர், " முதற்கட்ட பரிசோதனையானது 375 தன்னார்வலர்கள் மீது நடத்தப்படும். இரண்டாவது கட்ட பரிசோதனையானது 12 தளங்களிலிருந்தும் சுமார் 750 தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்கப்படும். முதற்கட்ட பரிசோதனையானது 18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான நபர்கள் மீது பரிசோதிக்கப்படும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மீது தடுப்பூசி பரிசோதனை நடைபெறாது. முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசி பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததா என கண்காணிக்கப்படும். மேலும், மருந்தின் டோஸ் அளவும் கணக்கிடப்படுகிறது" எனத் தெரிவித்தார்