அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதன் நாடாக பிரிட்டனும் இரண்டாவது நாடாக பஹ்ரைனும் ஒப்புதல் வழங்கியிருந்தன. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக் கோரி அந்நிறுவனம் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளது.
ஃபைசர் நிறுவனம் அளித்துள்ள விண்ணப்பத்தில், "நாடு முழுவதும் விநியோகம் செய்து விற்கும் வகையில் இறக்குமதிக்கான அனுமதி வழங்க வேண்டும். புதிய மருந்து மற்றும் ஆய்வகச் சோதனை விதி, 2019 இன்படி, ஆய்வகப் பரிசோதனைக்கு விலக்கு அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி, இதுகுறித்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, டிசம்பர் 2ஆம் தேதி, ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்துக்கு தற்காலிக அனுமதியை மருந்து மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனம் அளித்திருந்தது. மருந்து 95 விழுக்காடு பயனளிப்பதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படுவதாக ஒழுங்குமுறை நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, அமெரிக்காவில் தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக் கோரி ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.