புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, நாடு முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஒன்றரை மாதமாக மக்கள் கைகளில் வருமானம் எதுவும் இல்லை. மத்திய, மாநில அரசுகளை மட்டுமே நம்பியுள்ளனர். நடுத்தர மற்றும் ஏழ்மை வர்க்கத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.
இந்நிலையில் உரிமைகளுக்கான நீதி அமைப்பின் (Justice for Rights Foundation) சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “முழு அடைப்பு காரணமாக பல்கலைக்கழகம், கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும். மாணவ-மாணவியரின் பெயர்கள் பல்கலைக்கழக பதிவேட்டிலிருந்து நீக்கப்படாமலோ அல்லது விலக்கப்படாமலோ இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்கள் கட்டணம் வசூலிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். சட்டப்பிரிவு 21 மற்றும் 21ஏ, தனிப்பட்ட சுதந்திரம், வாழ்க்கை உரிமை மற்றும் கல்வி ஆகியவை வர்த்தகத்தின் ஒரு பகுதியாக மாறக் கூடாது என்று எடுத்துரைக்கிறது.
இதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அல்ல. எனவே அவைகளை லாபம் ஈட்டுவதற்கான முதன்மை நோக்கத்துடன் நடத்த முடியாது. இது அதற்கான காலமும் அல்ல.
ஆகவே இது போன்ற மருத்துவ அவசர காலங்களில், சட்டம் முறையான அறிவிப்பை உறுதி செய்து கடமையை நிறைவேற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவனந்தபுரம் ஐபிஎஸ் ஐஸ்வர்யாவுடன் சிறப்பு நேர்க்காணல்!