பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தல் பரப்புரையில் ஜே.டி.யூவின் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் இது தனது கடைசி தேர்தல் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று மும்பையில் ஊடகங்களிடையே பேசிய சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ரவுத், "பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி.
பிகார் முதலமைச்சரான நிதிஷ் குமார் தனது இறுதிப் பரப்புரையில் கூறியது போல இந்தத் தேர்தல் அவருக்குக் கடைசி தேர்தலாகவே அமையவுள்ளது. தேர்தல் ஆடுக்களத்தில் இருந்து ஓய்வுபெறும் மனநிலைக்கு அவர் வந்துவிட்டார் என்பதே அவரது வார்த்தைகளின் மூலமாக நாம் அறியமுடிகிறது.
ஓய்வுபெற விரும்பும் அவருக்கு ஓய்வை வழங்கப் பிகார் மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்றே நாங்கள் கருதுகிறோம்.
ஓய்வு பெறவிருக்கும் அவரை மக்கள் மரியாதையுடன் விடை தந்து அனுப்ப வேண்டும். பிகார் மக்கள் வெகுகாலமாக இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர்" எனக் கூறினார்.