நுகர்வோரின் தரவு பாதுகாப்பு தொடர்பாக பேடிஎம், கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமிருந்து யோசனைகளையும், விரிவான தகவல்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு சேகரித்தது. இதனைத்தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வாகனங்கள் ஒருங்கிணைப்பு நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழு அடுத்த வாரம் அழைக்கவுள்ளதாக தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் பிரதிநிதிகள் நவம்பர் நான்காம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஓலா , உபேர் பிரதிநிதிகள் நவம்பர் 5ஆம் தேதியும், பாரதி ஏர்டெல், ட்ரூகாலர் பிரதிநிதிகள் நவம்பர் 6ஆம் தேதியும் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ட்விட்டர், பேஸ்புக் மற்றும் அமேசான் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை இந்த குழு முன் சமர்ப்பித்தனர்.
பாஜக எம்.பி. மீனாட்சி லேகியின் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, 2019 மசோதா குறித்து அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிந்து இதுதொடர்பான தகவல்களை சேகரித்தும் வருகிறது.