கரோனா தீநுண்மி காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நீட்டித்துக்கொண்டே செல்லும் இந்த ஊரடங்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுவதுமாகத் தளர்த்தப்பட்டு வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு முடிந்த பிறகு உணவகங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள பொருள்களையோ ஊழியர்களுடனோ தொடர்பில் இல்லாமல் இருக்க பேடிஎம் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகிவருகிறது.
இது குறித்து பேடிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதற்காகப் பிரத்யேக கியூ.ஆர். குறியீடுகளை உருவாக்கியுள்ளோம். இந்த கியூ.ஆர். குறியீடுகள் உணவகங்களில் வைக்கப்படும்.
சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசிகளை எடுத்து பேடிஎம் செயலி மூலம் இந்தக் குறியீடை ஸ்கேன் செய்வர். அந்த கியூ.ஆர். குறியீடு குறிப்பிட்ட அந்த உணவகத்தின் மெனுவைக் காட்டும். அதை வைத்தே பயனாளிகள் டிஜிட்டலாகப் பணம் செலுத்தலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
"உணவகங்களில் தகுந்த இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும்" என பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் நிகில் சாய்கல் கூறுகிறார்.
முதல்கட்டமாக, இந்தியாவின் டாப் 30 நகரங்களில் உள்ள சுமார் ஒரு லட்சம் உணவகங்களுடன் கூட்டணி அமைத்து இந்தப் புதிய வசதியை அறிமுகம் செய்வதே பேடிஎம்-யின் திட்டம்.
இணையதள உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவும், அதன் செயலியில் இதுபோன்ற வசதிகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிகில் சாய்கல் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க : கரோனாவால் குஜராத்தில் அதிக உயிரிழப்பு - காரணத்தை கண்டறிய ஆராய்ச்சி