கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். முதலில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி தர மறுத்த மத்திய அரசு, பின் மே முதல் வாரத்தில் அதற்கான அனுமதியை அளித்தது.
அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் தொழிலாளர்களை அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். சில முதலமைச்சர்கள் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பும் தங்கள் மாநிலத் தொழிலாளர்களை அனுமதிக்க மறுப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விஷயம் தொடர்பாக மகாராஷ்டிர முதலமைச்சர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஆகியோருடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் என்னிடம் உறுதியளித்துள்ளார். அரசின் பேருந்துகளைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். ரயில்வே அமைச்சரும் ரயில் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தொழிலாளர்களை அனுமதிக்க சில முதலமைச்சர்கள் மறுப்பதால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சரத் பவார் எந்த மாநிலத்தின் பெயரையோ அல்லது முதலமைச்சர்களின் பெயரையோ குறிப்பிடவில்லை. இருப்பினும் பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் உத்தரப் பிரதேச மாநிலமும், கர்நாடக மாநிலமும் தங்கள் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல மறுப்பதாகத் தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஒரு லட்சம் பேருக்கு எதிராக வழக்குப்பதிவு - காரணம் என்ன?