நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான குழப்பம் நிலவிவரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது.
இந்த நிலைக்குழுவை காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையேற்றுள்ள நிலையில், வரும் 2020-21ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இது குறித்து குழுவின் உறுப்பினர் அதுல் அஞ்சன், 'மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஆதார் எண் கட்டாயப் பயன்பாடு, என்.பி.ஆர்இல் கேட்கப்படும் விவரங்கள் ஆகியவை குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
என்.பி.ஆர். குறித்து பல்வேறு மாநிலங்கள் ஐயம் எழுப்பி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநில அரசுகளை மத்திய அரசு கலந்தாலோசித்து நடைமுறை சாத்தியங்களை முன்னெடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அத்துடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலீட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர சிறப்புக் குழு ஒன்றை நாடாளுமன்றம் அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
இதையும் படிங்க: காய்கறி விலை சரிவு: பொதுமக்கள் நிம்மதி