ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தர்பெனி மற்றும் அஹ்நூர் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் நேற்றிரவு முதல் போர் ஒப்பந்த கோட்பாட்டை மீறி துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.
இந்த சண்டையில் சிறிய ரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், இந்திய வீரர்களை குறிவைத்து தாக்கினர்.
இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்புப் படையினர் திறம்பட செயல்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுகொண்டிருப்பதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் நேற்று முன்தினம் (மார்ச் 17) மாலை ராஜோவ்ரி எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
நேற்றும் அதே பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபடுவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.