ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்திலுள்ள, பி.ஜி. படைப்பிரிவு தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், எல்லைப் பகுதியில் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு குடியிருப்பு வாசிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலின் போது கிராமவாசிகளைப் பதுங்கு குழிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படுகிறது. எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், எந்தவிதமான உயிரிழப்புகளோ, காயமோ இந்த இடத்தில் பதிவு செய்யப்படவில்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டு மட்டும் 2,100 தடவை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியதில், 29 இந்தியர்கள் கொல்லப்பட்டும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.