பாகிஸ்தான், இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் டி பிரம்மா, பால் செல்வதாஸ் ஆகிய இரண்டு சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை) பணியாளர்கள் இன்று காலை முதல் திடீரென மாயமானதால் பதற்றம் ஏற்பட்டது. இருவரும் விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்தாக பாகிஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், மத்திய அரசு இருவரையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 12 மணி நேரத்திற்கு பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்திய தூதரக அலுவலர்களை பாகிஸ்தான் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்களின் உடலில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. அது மட்டுமின்றி, குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு இருவரையும் மிரட்டி, படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அலுவலர்கள் பயன்படுத்திய வாகனமும் பலத்த சேதம் அடைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு தற்போது இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ”தொடர்ச்சியாக பல நாள்களாக, பாகிஸ்தான் அரசு இந்திய தூதரக அலுவலர்களை சீண்டி வருகிறார்கள். பாகிஸ்தான் தான் கையெழுத்திட்டுள்ள பல ஒப்பந்தங்களை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அங்கு பணியாற்றும் இந்திய அலுவலர்கள், அவரின் குடும்பத்தினர், சொத்துகளுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பு என்பதை மறந்துவிடக் கூடாது. பாகிஸ்தான் அலுவலர்கள் தொடர்ச்சியாக பதட்டங்களை ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய - சீன மோதல் : ஒரு பார்வை