இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், பூன்ச், ரஜோரி ஆகிய மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகே கடந்த ஐந்து நாள்களாக சிறியரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் விதிமீறல் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது,
"இன்று அதிகாலை 3.30 மணியளவில் பூன்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ண காதி பகுதியிலும், காலை 7.20 மணியளவில் ரஜோரி மாவட்டத்தில் அமைந்துள்ள நௌஷேரா பகுதியிலும், சிறியரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் விதிமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள கிரண் பள்ளத்தாக்கு, பூன்ச், உரி, கிருஷ்ண காதி, அக்நூர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ச்சியாக குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்திய பகுதிகளுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கவே பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதல்களை நடத்திவருவதாக மூத்த ராணுவ அலுவலர்கள் சிலர் சந்தேகிக்கின்றனர்" எனக் கூறினார்
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் 2018ஆம் ஆண்டில் ஆயிரத்து 629ஆக பதிவாகியிருந்த விதிமீறிய தாக்குதல் சம்பவங்கள், 2019ஆம் ஆண்டில் மூன்றாயிரத்து 200ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!