1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்தார். இவர் குறித்து பலமுறை பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு மறுத்தது.
இந்நிலையில் நேற்று இரவு (ஆகஸ்ட் 22) சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்று வீட்டின் முகவரியோடு பாகிஸ்தான் அரசு தகவல் வெளியிட்டது.
இதுகுறித்து முன்னாள் சிபிஐ இணை இயக்குநர் ஷாந்தனு சென் பேசுகையில், '1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பிற்கு திட்டமிட்டு, நிதியளித்த தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், முஷ்தஃபா தோஸா ஆகிய மூவருக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது. அது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. இவர்களின் அடைக்கலம் பற்றி பாகிஸ்தான் இத்தனை நாள்களாக பொய் கூறி வந்துள்ளது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளது என்ற ஆதாரங்கள் சிபிஐ-யால் சிரமமின்றி சேகரிக்கப்பட்டன.
அந்த ஆதாரங்கள் மிகவும் நுணுக்கமாக தடா நீதிமன்றம், மும்பை நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய இடங்களில் கூறப்பட்டு ஏற்கப்பட்டது. நேற்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள 88 பேர் பட்டியலில் உள்ள தாவூத் இப்ராஹிமை நாடு கடத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு மற்ற நாடுகளும் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்...!