கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பாதிக்காத வண்ணம் செயல்பட மத்திய அரசு 1.7 லட்சம் கோடி அவசர கால சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன்படி அடித்தட்டு மக்கள், விவசாயிகள் தினக்கூலிகள், அமைப்பு சார தொழிலாளர்களுக்கு இலவச ரேஷனுடன் ஜன்தன் வங்கிகணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு இதுவரை முறையாக செயல்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மத்திய, மாநில அரசு அறிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தமிழ்நாடு போன்ற சீரிய நிர்வாகம் கொண்ட மாநிலத்திலேயே இந்த நிலைமை என்ற நிலையில் மோசமான நிர்வாகம் கொண்ட மாநிலத்தின் நிலைமை என்ன என்பதை நாம் உணர வேண்டும். பிரதமர் லாக் டவுன் அறிவிக்கும் முன்னர் மத்திய அரசு எந்தவித முன்னேற்பாடும் மேற்கொள்ளவில்லை. இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், லாக் டவுனுக்குப் பிறகும் அரசு நிலைமையை சீர் செய்யவில்லை என தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊடரங்கு: ஆடுகளுக்கு காலிபிளவர் விருந்தளித்த விவசாயி!