கேள்வி- தேசிய மக்கள் தொகை பதிவேடு முதலில் 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என பாஜக கூறுகிறது. ஆனால் நீங்கள் இது இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறுகிறீர்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பதில்- 2010ஆம் அண்டு குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கிடப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்தே குடிமக்கள் பதிவேடு எடுக்கப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின்பு அது நிறுத்தப்பட்டது. அப்போது நாங்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு எடுக்கவில்லை. அது பற்றி குறிப்பிடவும் இல்லை. 2010இல் உள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு படிவத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான 10 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன.
ஆனால் புதிய தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கடைசியாக குடியிருந்த இடம், தாய், தந்தையின் பிறந்த இடம், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், ஒட்டுநர் உரிமம் உள்ளிட்ட 21 தகவல்கள் கேட்கப்படுகின்றன. இதெல்லாம் ஏன் கேட்கப்படுகிறது. மக்கள் தொகை பதிவேடு என்ற போர்வையில் குடியுரிமை பதிவேடு கொண்டுவரப்படுகிறது. அசாமில் குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்ட பின் மக்கள்தொகை பதிவேடு எடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகிய இருவரும் தொடர்ந்து பல முறை மக்களவையில் கூறியுள்ளனர். தற்போது அவர்கள் மறுக்கலாம். ஆனால் அவை நாடாளுமன்ற அவை குறிப்பில் உள்ளது.
கேள்வி- எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இல்லாததால் தான் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதா?
பதில்- பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியமானது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியிலிருந்தால் தான் பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும். ஆனால் அவர்கள் பிளவுபட்டிருந்தால், பாஜக வெற்றி பெற்றுவிடும். 2014ஆம் ஆண்டில் 31 சதவிகித வாக்குளை மட்டுமே பாஜக பெற்றது. ஆனால் 282 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் 2019ஆம் ஆண்டில் பாஜக 38 சதவிகித வாக்குளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் 303 இடங்களைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தியிருந்தால் பல இடங்களில் பாஜக தோல்வியைச் சந்தித்திருக்கும். இதற்கு சாட்சியாக ஜார்கண்டில் மூன்று கட்சிகளும் இணைந்து வெற்றி பெற்றுள்ளனர்.
கேள்வி- காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளதா?
பதில்- காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கான வெற்றிடம் இல்லை. தற்போது சோனியா காந்தி பொறுப்பில் உள்ளார்.
கேள்வி- ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பொறுப்புக்கு வர வேண்டும் என கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனரே?
பதில்- ராகுல் காந்தி பதவியிலிருந்து விலக முடிவு செய்தார். நாங்கள் பதவியில் நீடிக்குமாறு வலியுறுத்தியும் அவர் கேட்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். மீண்டும் தலைவராக வர வேண்டும் என விரும்பினால் அவரே தெரிவிப்பார்.
கேள்வி- முப்படைத் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்- முப்படைகளுக்கும் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஆனால் பிபின் ராவத் இதற்கு சரியான தேர்வுதானா என எனக்குத் தெரியாது. இதன்மூலம் படைகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இருக்கும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற பதவியிடங்கள் உள்ளன.