உலகெங்கும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
அதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே இது முதலில் பயன்பாட்டுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக டிசிஜிஐ அமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கரோனா தடுப்பு மருந்தின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மருத்துவ சோதனைகளை இந்தியாவில் சீரம் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரிட்டனில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு கடும் நரம்பியல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சில காலம் இந்த தடுப்பு மருந்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டாலும் தொடக்க காலத்தில் மிகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பு மருந்து கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தார்