குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற கொள்கையைக் கட்டாயமாக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், நிசாமாபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய ஹைதராராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்(AIMIM) கட்சித் தலைவருமான ஒவைசி, "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ‘இரு குழந்தை’ கொள்கை குறித்துப் பேசுகிறார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பாஜக அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. இப்போது அவர்கள் இரு குழந்தை கொள்கை குறித்து பேசுகின்றனர்.
நாட்டின் 60 விழுக்காட்டினர் 40 வயதுக்கு கீழான இளைஞர்கள். அவர்களுக்கு வேலைவாய்பை ஏற்படுத்த மோடி அரசினால் முடியவில்லை. 2018ஆம் ஆண்டு மட்டும் நாள்தோறும் 36 இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். இரு குழந்தைகள் கொள்கை பற்றி பேசும் நீங்கள் 36 குழந்தைகள் பலியானதை தடுக்கத் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
பல பாஜக தலைவர்களைப் போல எனக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உங்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியவில்லை. வேலைவாய்ப்பு குறித்துப் பேசினால், நான் எதோ வெறுப்பை உமிழும் பேச்சை பேசுவதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.
அரசை நடத்துபவர்கள் நீங்கள்தான், நான் இல்லை. எனவே எனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை. இஸ்லாமியர்களின் மக்கள்தொகை குறைப்பது குறித்து ஆஎஸ்எஸ் பேசுகிறது. நான் வேலைவாய்ப்பு குறித்து பேசினால், அவர்கள் இரு குழந்தைகள் கொள்கை பற்றி பேசுகின்றனர்" என்று பாஜகவையும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதையும் படிங்க: 'இந்தியா இந்துக்களின் நாடு' - ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு