நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா ஆந்திராவிலிருந்து 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி பிரிந்து தனது புதிய பயணத்தை தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) தனது ஆறாவது நிறுவன தினத்தை அம்மாநிலம் கொண்டாடுகிறது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தெலங்கானா 2.04 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கே.சந்திரசேகர் ராவ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
மாநிலத்தின் தொழில்துறை கொள்கைகள் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் தெலங்கானா அரசு முன்னணியில் இருந்துவருகிறது.
தெலுங்கானா ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்தபோது 2013-14 ஆம் ஆண்டில் 0.4 விழுக்காடு ஆக தொழில்துறை வளர்ச்சி இருந்தது. இந்நிலையில், 2018-19 ஆம் ஆண்டில் வளர்ச்சி, 5.8 விழுக்காடு ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில், கோகோ கோலா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஐக்கியா (Ikea) உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.
ஐ.டி துறையில் கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கும் மாநிலம் தாய்வீடாக திகழ்கிறது. ஐடி ஏற்றுமதியில் 2019-20ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.1.29 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது 14ஆவது நிதியாண்டில் ரூ.66,276 கோடியாக இருந்தது.
மேலும், மாநிலத்தில் 2.10 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக பொதுஅடைப்பு அமலில் இருந்தபோதிலும், ஐ.டி. துறைகள் 18 விழுக்காடு வளர்ச்சியை பதிவுசெய்துள்ளன. இது தேசிய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மாநில தகவல் தொலைதொடர்பு அமைச்சர் கே.டி.ராமாராவ் கூறுகையில், “ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையை அடுக்கு II மற்றும் III நகரங்களுக்கு விரிவுபடுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது” என்றார்.
கே.சி.ஆர் தலைமையிலான அரசாங்கம் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் மின் துறைகளில் "கணிசமான சாதனைகளை" புரிந்துள்ளதாகவும் முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: இந்தியாவின் அரிசிக் கிண்ணமாக தெலங்கானாவை மாற்றும் பணியில் இறங்கிய கேசிஆர்!