கரோனா வைரஸ் பரவல் சர்வதேச அச்சுறுத்தலாக மாறி, கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலால் உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர, மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மே 7ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதிவரை முதல்கட்ட மிஷனும், இதையடுத்து மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதிவரை இரண்டாம் கட்ட மிஷனும், ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூன் 30 தேதி வரை மூன்றாம் கட்ட மிஷனும் செயல்படுத்தப்பட்டன. தற்போது நான்காம் கட்டமாக இந்த மிஷன் நடைபெற்றுவருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, " வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்டுவர தற்போது வந்தே பாரத் மிஷன் நான்காவது கட்டமாக நடந்துவருகின்றது.
இந்த நான்காவது கட்ட மிஷனில், ஜூலை 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் ஏறத்தாழ 120 விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கூடுதல் விமானங்கள் மூலமாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பா, கிர்கிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்துவரப்படுவர்.
இந்தத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களும், 751 சர்வதேச விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெவ்வேறு நாடுகளுக்கு இடையேயும் விமானங்கள் இணைக்கப்படவுள்ளதால் நான்காவது கட்ட மிஷனில் மொத்தமாக 926 விமானங்கள் பங்குபெறும். இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றின் 180 விமானங்களும் இந்த மிஷனின் மத்திய அரசால் பயன்படுத்தப்படும்.
ஜூலை 15 ஆம் தேதி நிலவரப்படி, 6 லட்சத்து 87 ஆயிரத்து 467 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேபாளம், பூட்டான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து 1 லட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் நிலம் வழியாகத் திரும்பி வந்துள்ளனர்.
மாலத்தீவு, இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து, இந்திய கடற்படைக் கப்பல்கள் மூலமாக 3,789 திரும்பியுள்ளனர். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு பயணத்தைத் தொடங்கப்போவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரு தரப்பு விமான நிறுவனங்களும் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ், தமது பயணிகளை பயணம் மேற்கொள்ள அனுமதிக்கும். இன்னும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்களை தாயகம் அழைத்துவர கோரிக்கை விடுத்திருப்பதை உணர்ந்த மத்திய அரசு தேவைக்கேற்ப வந்தே பாரத் மிஷன் விமானங்களை ஏற்பாடு செய்யவும் முடிவு எடுத்துள்ளது" என்றார்.