டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் சேர்த்து கரோனா காலகட்டத்திற்கு முன்னதாக சுமார் 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் கடந்த 12 மாதங்களுக்குள் 36 ஆயிரத்து, 433 வென்டிலேட்டர்கள் ''மேக் இன் இந்தியா '' திட்டத்தின் மூலம் அனைத்து பொது சுகாதார மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வென்டிலேட்டர்கள் மீதான அனைத்து ஏற்றுமதி கட்டுப்பாடுகளும் இப்போது அகற்றப்பட்டு, மேக் இன் இந்தியா மூலம் வென்டிலேட்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் இந்தியா மருத்துவ பொருட்கள் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.
தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், இந்தியா கிட்டத்தட்ட பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வென்டிலேட்டர்கள், பிபிஇ கருவிகள் மற்றும் என் -95 முகக்கவசங்களை மட்டுமே நம்பியிருந்தது. ஆனால் தற்போது இந்தியா உள்நாட்டில் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை உறுதிசெய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கும் இலவச முகக்கவசங்கள், மருந்துப் பொருள்கள் விநியோகித்தும் வந்துள்ளது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியா சிறிய உள்நாட்டு உற்பத்தியாளராக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா உலகளவில் இரண்டாம் பெரிய உற்பத்தியாளர் நாடாக உருமாறியுள்ளது. அரசாங்க மின் சந்தையில் ஏற்கனவே கிட்டத்தட்ட 1,700 உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 1.7 கோடி லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநில அரசாங்கங்களுக்கு விநியோகிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டு லட்சத்திலிருந்து 89 லட்சமாக அதிகரித்தது எனவும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்: மத்திய அரசு தகவல்!