உலகில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு செல்போனுக்கும் பிரத்யேகமாக ஒரு ஐ.எம்.இ.ஐ.(IMEI - International Mobile Equipment Identity) எண் ஒதுக்கப்படும். பொதுவாக குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களின் செல்போனை இந்த ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு தான் காவல் துறையினர் கண்டுபிடிப்பார்கள்.
ஒரு செல்போனில் ஒதுக்கப்பட்ட 14 இலக்கம் கொண்ட ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு மற்றொரு செல்போனை தயாரிப்பது என்பது சட்டப்படி குற்றம். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் விதிமுறைகளுக்கு மாறாக, ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணில் 13,500 மொபைல்கள் உருவாக்கிய தொழிற்சாலை மீது சைபர் பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள காவலர் ஒருவர், தனது ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யாததால், சைபர் பிரிவு காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது ஸ்மார்ட்போனை பரிசோதித்த சைபர் பிரிவு காவலர், அதே ஐ.எம்.இ.ஐ. எண்ணைக் கொண்டு 13 ஆயிரத்து 500 செல்போன்கள் உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்து அதிர்ந்துவிட்டார்.
செல்போனை உற்பத்தி செய்த தொழிற்சாலையின் அலட்சியத்தால், இது நடந்துள்ளதாகவும் குற்றவாளிகள் இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்து இருப்பதாகவும் மீரட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என்றும்; இது குறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இது குறித்து மீரட் நகரின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜிவ் சபர்வால் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து சைபர் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஐ.எம்.இ.ஐ. எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போனை தயாரிப்பது என்பது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் விதிமுறைகளுக்கு எதிரானது" என்றார்.
இதையும் படிங்க: 'சீனப் பொருள்களை நிராகரிப்போம்'- பொதுமக்களிடம் சி.ஆர்.பி.எஃப். வீரர் வேண்டுகோள்!