இது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லி, மேகாலயா போன்ற இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. டெல்லியில் நடந்த கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது ஏற்கப்படவில்லை.
மேகாலயாவிலும் இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவிவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாங்கள்தான் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியும். அப்படி உள்ள சூழலில், எங்களைப் பேசவிடாமல் அனுமதி மறுக்கின்றனர்.
டெல்லியில் நடந்த வன்முறை குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இது பற்றி நாங்கள் கோரிக்கைவிடுத்தால் அதனைக் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்க்கட்சிகளின் அவை நடவடிக்கைகளை எந்தச் செய்தி தொலைக்காட்சியும் ஒளிபரப்பக் கூடாது என்றும் பத்திரிகைகள் பிரசுரம் செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏற்க முடியாதது. இது நாடு எந்த வழியில் செல்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்துவரும் போராட்டங்கள், வன்முறை தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்காத வரையில் நாங்கள் இது தொடர்பான கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்போம். இப்படியே போனால் அவையை ஒத்திவைக்க வேண்டிய சூழல்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.