ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக எதிர்க்கட்சி தலைவர்கள் கொண்ட குழு அம்மாநிலத்திற்கு சென்றது. 9 கட்சிகளை உள்ளடக்கிய குழுவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா, திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றனர்.
ஸ்ரீநகர் விமான நிலையத்துக்குச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கொண்ட குழு காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் அழைப்பை ஏற்று இங்கு வந்தேன். ஆனால், எங்களை விமான நிலையத்தில் இருந்து வெளியே விடவில்லை" என்றார்.
டெல்லிக்கு திரும்பிய எதிர்க்கட்சி தலைவர்கள் கொண்ட குழு புட்கம் மாவட்ட நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தங்களின் காவல் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.