கேரளாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சட்டப்பேரவையின் 21ஆவது கூட்டத்தொடர் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் உரையுடன் இன்று தொடங்கியது.
அப்போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான பதாகைகள் ஏந்தியபடி, ஆளும் எல்.டி.எஃப். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆளுநரின் உரைக்குத் தொடர்ந்து இடையூறு செய்திடும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பியதால், அவர் பொறுமை இழந்ததாகக் கூறப்படுகிறது. தனது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்ற அனுமதிக்குமாறு மூன்று முறை எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சியினர் செவிசாய்க்கவில்லை.

இதனிடையே, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா எழுந்து நின்று, “டாலர் கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் உடனடியாக பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தினார்.
ஆளுநர் அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவை வளாகத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இதையும் படிங்க : இந்தியாவில் குறையும் கரோனா தொற்று!