மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, அம்மாநில ஆளுநர் லால்ஜி தாண்டன் அளித்த உத்தரவின்பேரில் அங்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காகக் கூடியது. கூச்சல் குழப்பம் காரணமாக பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முதலமைச்சர் கமல் நாத்துக்கு கடிதம் எழுந்தியிருந்த ஆளுநர் லால்ஜி, நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் வேறு எந்த முறையிலும் வாக்களிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆளுர் லால்ஜி எழுதியிருந்த கடிதத்தில், மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் எனத் தெரிவித்திருந்தார்.
கமல் நாத் அமைச்சரவையிலிருந்து விலகிய ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினமா கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை தலைவர் என்.பி. பிரஜாபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முதலமைச்சர் குறித்த சர்ச்சை போஸ்டர்கள்: இருவர் கைது