திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மகர விளக்கு பூஜைக்காக வரும் 31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை திறக்கப்படவுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணி முதல் தொடங்கியது. வரும் ஜனவரி 7ஆம் தேதி வரை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக முன்பதிவு செய்தவர்கள், தரிசனத்திற்கு 48 மணி நேரம் முன்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்து, தங்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். தரிசனத்தின்போது இந்த சான்றிதழை ஒப்படைத்த பின்னரே, பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா இல்லை என்ற சான்றிதழ் பெறாதவர்களுக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டாவின் நிலக்கல் பகுதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என அம்மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உணவு ஆர்டர் செய்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிகொடுத்த பெண்: பெங்களூரில் அதிர்ச்சி!