கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் வெங்காயத்தின் விலையானது சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விண்ணைத் தொட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம், தற்போது ஏறத்தாழ 100 ரூபாயை அடைந்துள்ளது. இந்த விலை உயர்வானது, தீபாவளி போன்ற விழாக்காலங்களில் வீடுகளின் வரவு செலவுத் திட்டத்தில் பெரிதும் தாக்கம் செலுத்தி உள்ளது.
இயற்கை சீற்றம், விலை ஏற்றம்
கனமழையின் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாகக் குறைந்து விட்டதை அடுத்து, வெங்காயத்தின் விலை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையை சரியான நேரமாகக் கருதும் இடைத்தரகர்கள், தங்களது சேமிப்புக் கிடங்குகளில் உள்ள குறைந்த அளவிலான வெங்காய இருப்பை பெரிய விலைக்கு கைமாற்றிவிடும் வணிக சூதாட்டப் பந்தயத்தில் களமிறங்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம், அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேவையான அளவு இறக்குமதியை அனுமதித்து, அதன் தேவையைப் பூர்த்தி செய்து வணிக விலையைக் கட்டுப்படுத்தவும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வெங்காய விலை உயர்வால் விவசாயிகள், வர்த்தகர்கள், நுகர்வோர் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்பது மட்டும் உறுதி!
அரசியல் தாக்கம்
பல ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக இருந்த வெங்காயமும், அதன் விலை உயர்வும் அரசியலில் செலுத்திய தாக்கத்தை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
வெங்காய விலையில் ஏதேனும் திடீர் உயர்வு எழுந்தால் அது அரசியல் களத்தில் ஒரு பெரும் பிரச்னையாக மாறும் என்பதே கடந்தகால வரலாறு.
கடந்த 1998ஆம் ஆண்டில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான டெல்லி அரசு, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு வெங்காய விலை உயர்வு ஒரு முக்கியக் காரணம் என அன்றைக்கு கூறப்பட்டது கவனிக்கத்தக்கது.
வெங்காயத்தின் விலை உயர்வால் கோபமடைந்த வாக்காளர்களால் அதன்பிறகு பாஜக மீண்டும் அங்கே ஆட்சிக்கே வரமுடியவில்லை.
கிடங்குகளும், பதப்படுத்தலும்
வெங்காயம் போன்ற விரைந்து அழுகும் ஒரு பொருளுக்கு, ஆண்டு முழுவதும் முறையான பராமரிப்பு வசதிகளைக் கொண்ட சேமிப்புக் கிடங்குகள் மிக அவசியம். துரதிர்ஷ்டவசமாக, நமது நாட்டில் அத்தகைய வசதி வாய்ப்புகள் இல்லை.
விவசாயிகளை இதுபோன்ற சிக்கல்களில் இருந்து காக்க மத்திய அரசு முன்னெடுத்த ‘ஆபரேஷன் பசுமை’ திட்டம் எதிர்பார்த்த அளவு கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.
நிலையான தீர்வு நோக்கிய பயணிக்க வேண்டும்
வெங்காயத்தில் நீர் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால், கிடங்கு வசதிகளை மேம்படுத்த ஸ்மார்ட் மற்றும் நிலையான தீர்வுகள் ஆராயப்பட வேண்டும்.
வெங்காயத்தை சேமிக்க இஸ்ரேல் மற்றும் பிரேசில் ஏற்றுக்கொண்ட மாதிரி வழிமுறைகளை ஆராயும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.