நாட்டில் வெங்காயத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால், வெங்காய உற்பத்தி பெரிதளவில் பாதித்தது. விநியோகிக்கப்படும் வெங்காயத்தின் அளவை விட உற்பத்தி குறைந்ததன் காரணமாக, வெங்காய விலை எகிறியது.
நாடு முழுவதும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.60 வரை சந்தையில் விற்கப்பட்டது. உணவுப் பொருட்களில் மிக முக்கிய அங்கமாக வெங்காயம் உள்ளது.
ஆனால், அதன் விலை ஜெட் வேகத்தில் பறந்ததால் சாமானிய மக்களை பெரிதளவு பாதித்தது. இந்நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ”வெங்காய விலை ஏற்றம் என்பது தற்காலிகமான நிலைதான். ஒவ்வொரு ஆண்டும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகிய மூன்று உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
இருப்பினும், வெங்காயத்தின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. நாட்டுக்குள் விநியோகிக்க இரண்டாயிரம் டன் வெங்காயத்தை எம்.எம்.டி.சி. நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படும். மேலும், விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டுவந்த சலுகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.