நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள் துரிதமான முறையில் மக்களுக்கு தேவையானவற்றை செய்துவருகின்றன. மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், மேற்கு வங்கம் மாநிலம் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் நகரில் தற்காலிக பஜார் ஒன்றை தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. நுழைவுக் கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளான அரிசு, மளிகை சாமான்கள், காய்கறிகள் தேவைப்படுவோர் ஒரு ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், பொருள்கள் எடுத்துச் செல்ல பணம் செலுத்த தேவை இல்லை என்றும் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த பஜாரில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் விதமாக ஒவ்வொரு ஸ்டால்களும் இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ரத்தன் கர் கூறுகையில் "இந்தப் பகுதியில் உள்ள விளையாட்டு திடல் ஒன்றில், பஜார் வைத்துள்ளோம். ஆண்டுதோறும் அரசு சார்பாக எங்கள் நிறுவனத்திற்கு நிதி கிடைக்கும். அந்த நிதியை வைத்து மக்களுக்கு உதவும் வகையில் சமூக சேவை செய்துவருகிறோம். கரோனா தொற்று பரவ ஆரம்பித்தப் பிறகு எங்களுக்கு கிடைத்த நிதி அனைத்தையும் தேவை இருப்பவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம்", என்றார்.
இதையும் படிங்க... ஊரடங்கு உத்தரவு: ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்!