மகாராஷ்டிரா மாநிலம் தானே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை ஒரு செல்லிடப் பேசியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், இரண்டு பெண்கள், ஒரு ஆண் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஒரு வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பீவண்டியில் உள்ள காமத்கர் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்படும், உடனடியாக வந்து அவர்களை கைது செய்ய வருமாறு காவல்துறையிடம் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
அதன்பேரில், காவல்துறை துணை ஆணையர் (மண்டலம் -2, பீவண்டி) ராஜ்குமார் ஷிண்டே தலைமையிலான காவல்துறையினர், சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். குறிப்பிட்டுள்ளபடி பதிவு எண்ணுடன் ஒரு காரை காவல்துறையினர் கண்டுபிடித்த போதிலும், அதற்குள் உடல்கள் எதுவும் இல்லை. மேலும், கொலை நடந்ததற்கான எவ்வித சுவடுகளும் இல்லாததால், காவல்துறையினர் மீண்டும் திரும்பி வந்தனர்.
![One held for making hoax call to police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6564207_bha.jpg)
இது தொடர்பாக துணை ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே கூறுகையில், கொலை நடந்ததாக அடையாளம் தெரியாத நபர் யாரோ விளையாட்டாக தகவல் தெரிவித்துள்ளார். புரளி கிளப்பிய அந்த நபர் குறித்து விசாரித்தபோது, காவல்துறையை அழைத்து பேசியவர் பீவண்டியில் உள்ள பிரம்ஹந்த் நகரில் வசிக்கும் கிருஷ்ணா மகாதேவ் செவாலே என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்தவொரு குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் தான் ஏமாற்று அழைப்பு விடுத்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறினார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” என்றார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கரோனா