பாகூர் கிராமத்தில் பல ஆண்டுகளாகவே சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சியளித்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால், இச்சாலைகள் மேலும் மோசமாகியுள்ளன.
பாகூர் - மாஞ்சோலை சாலை, கடலூர் - கன்னியக்கோவில் சாலை, பரிக்கல்பட்டு - குருவிநத்தம், சித்தேரி சாலை ஆகியவற்றில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, கற்கள் பெயர்ந்திருப்பதால் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்க கிராம மக்கள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குருவிநத்தம், பாரதி நகரைச் சேர்ந்த 83 வயது முதியவரான புருஷோத்தமன் பாகூர்-மாஞ்சோலை சாலையிலுள்ள பள்ளங்களை, யாரையும் எதிர்பாராமல், சாலையோரமுள்ள மண் மற்றும் கற்கள் கொண்டு நிரப்பி தனி ஆளாக சரி செய்து வருகிறார். தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வரும் இவர், தினமும் மாஞ்சோலை வழியாக பாகூருக்கு நடந்தே சென்று வருகிறார். இந்நிலையில், மோசமான சாலையால் தினமும் மக்கள் அவதிப்படுவதையும், கீழே விழுந்து காயமடைவதையும் பார்த்து வந்த முதியவர் புருஷோத்தமன், மிகுந்த கவலையடைந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக அவர் தனி ஆளாக இந்தப் பணியை செய்து வருகிறார். முதியவரின் இச்செயலை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சாலைகளை முதியவர் செப்பணிடும் இக்காட்சிகள் பரவலாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அங்கன்வாடி பணியாளர்களுக்கு படகு: உதவிய ஆனந்த் மஹிந்திரா