சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் போர்தி. சில நாள்களாக இவர் காணாமல் போன நிலையில், ஜூலை 24ஆம் தேதியன்று இவரது உடல் சல்னாபதர் கிராமத்தில் உள்ள குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மெயின்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தனது மூத்த மகனின் உடலை வாங்குவதற்காக அவரது தந்தை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் இருந்த சுகாதார பணியாளர் அவரிடம், 'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும், மகனின் உடலும் வேண்டுமென்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எதுவும் கிடைக்காது' என கூறியுள்ளார்.
இதற்கு, 'ஏழ்மையில் இருக்கும் என்னிடம் கொடுப்பதற்கு பணம் எதுவுமில்லை' என பிரமோத்தின் தந்தை கூறியதற்கு, மருத்துவமனை பணியாளர்கள் சிலர் திட்டியுள்ளனர்.
இது குறித்து பிரமோத்தின் தந்தை கூறும்போது, “நீண்ட நேரமாக எனது மகனின் உடலைக் கேட்டு காத்திருந்தும் எவ்வித பலனுமில்லை. பின்னர் எனது இளைய மகன் தனது இருசக்கர வாகனத்தை அடகு வைத்து 4 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தார். இந்த பணத்தை அங்கு பணியிலிருந்த சுகாதார பணியாளர் லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட பின்னரே, பிரமோத்தின் உடலையும், உடற்கூறாய்வு அறிக்கையையும் கொடுத்தனர்” என்றார்.
இதையும் படிங்க: பெரியார் நெஞ்சில் தைத்த முள் பிடுங்கப்பட்டது; ஆனால் காயம் ஆறவில்லை!