கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சம்பந்தமாகக் கடந்த வாரம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, தொடர்ந்து கைதும் செய்யப்பட்டார்.
அவரது கைதை எதிர்த்து ஒக்கலிகா சமூகத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்க 5,000 ஒக்கலிகா சமூகத்தினர், தேசிய கல்லூரி மைதானத்தில் கூடியுள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் மூலமும் பேருந்துகளின் மூலமும் அதிக எண்ணிக்கையில் போராட்ட இடத்தை நோக்கி வந்து வண்ணம் இருக்கின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்டப்பேரவை உறுப்பினர்களான கிருஷ்ணா பைரேகவுடா, சௌமிய ரெட்டி, தினேஷ் குண்டு ராவ் ஆகியோரும் தேசிய கல்லூரி மைதானத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உரையாற்றினர்.
இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ், "பேரணிக்காக 500 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடத் துணை ஆணையர் பதவியில் உள்ள 20 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அமைப்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து விடுமுறைக்கு அடுத்த நாளே இந்த போராட்டத்துக்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம் " என்றார்.
பேரணியின்போது வன்முறைகள் நிகழாமல் தடுக்க கர்நாடக சிறப்பு ரிசர்வ் காவலர்கள் (கே.எஸ்.ஆர்.பி) அங்குப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.