ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள மாநில அரசின் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான ஹோட்டலில் பாஸ்கர் என்பவர் துணை மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த ஹோட்டலில் பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் ஒருவர் பாஸ்கரிடம் முகக்கவசம் அணியுமாறு கூறியதாக அறியமுடிகிறது. ஊழியர் ஒருவர் தன்னை எப்படி முகக்கவசம் அணியச் சொல்லலாம் என்று ஆத்திரமடைந்து, அப்பெண்ணை சரமாரியாக பாஸ்கர் தாக்கியுள்ளார்.
அவரைத் தலையில் இழுத்துப் போட்டு அடித்துள்ளார். மேலும், அருகில் மேஜையிலிருந்த ஒரு கட்டையைக் கொண்டும் பலமாகத் தாக்கியுள்ளார். சக ஊழியர்கள் அவரைத் தடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமாக அப்பெண்ணிடம் நடந்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்து அலுவலகத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி இன்று (ஜூன்30) வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஷீலா ஐரீன் பந்த்: இந்தியாவின் மகள் பாகிஸ்தான் தாயாக உருவெடுத்த கதை!