இந்தியாவில் ஆம்பன் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டது மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் தான். புயலின் தாக்கத்தால் மேற்கு வங்க மாநில மக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஒடிசா அரசு, 500 மெட்ரிக் டன் பாலித்தீன் தார்பாய்களை மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஒடிசா மாநில தலைமைச் செயலர் ஏ.கே. திருப்பதி, 'நட்பு மாநிலமான மேற்கு வங்கத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யவேண்டும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புயலால் வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தும் வகையிலான கூரைகள் அமைப்பதற்கு 20x20 அளவிலான பாலித்தீன் தார்பாய்களை வழங்கியுள்ளோம்.
முன்னதாக, ஒடிசா மாநிலத்தின் பேரிடர் மீட்பு அலுவலர்கள் 500 பேர் சாலைகளை சீரமைப்பதற்காகவும், புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை சீரமைப்பதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாகவும் பல்வேறு அலுவலர்கள் ஒடிசாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர். சால்ட் லேக் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'மேற்கு வங்கத்தில் கூடுதல் ராணுவம் வேண்டும்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தல்