கரோனா வைரஸ் காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுவருகின்றன.
அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை அம்மாநில அரசு மீட்டு வருகிறது.
அதன்படி ரயில் அல்லது பேருந்து மூலம் மீட்க முடியாத குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஒடிசா மாநில அரசு விமான சேவை மூலம் மீட்டு வருகிறது.
இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சிக்கி தவித்த 180 தொழிலாளர்களை ஒடிசா அரசு விமான சேவை மூலம் மீட்டுள்ளது.
போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானத்தின் மூலம் புறப்பட்ட அவர்கள் இன்று பிஜூ பட்நாயக் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்படும் மையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுவரை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.