ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள கதித்துலகுண்டி( Kaditulagunti) கிராமத்திற்கு மருத்துவர் ராதேஷ்யம் ஜீனா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பல்ஸ் போலியோ திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராமத்தில் ஒரு பெண் கடுமையான பிரசவ வலியில் துடிக்கும் தகவல் ஜீனாவிற்கு கிடைத்துள்ளது. தகவலறிந்து விரைந்த ஜீனா குழுவினர், கர்ப்பிணி பெண்ணிற்கு நல்லபடியாக பிரசவம் பார்த்து குழந்தையை அவரது கையில் கொடுத்தனர். ஆனால்,எதிர்பாராத வகையில் அப்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து, ஜீனா குழுவினர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டனர் ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலை வசதி சரியாக இல்லாத காரணத்தினால் வரமுடியாத தனது இயலாமையை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, என்ன செய்வதென்று தவித்த மருத்துவர்கள் துரிதமாக யோசித்து, அப்பெண்னை தங்களது தோளில் ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கிச்சென்று கலிமேலா மருத்துவமனையை அடைந்தனர். தற்போது, மருத்துவர்களின் மேற்பார்வையில் அப்பெண் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்கள் பெண்ணை மருத்துவமனைக்கு தோளில் சுமந்து சென்ற காணொலியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதை பகிர்ந்த பலரும், எளிதில் அணுக முடியாத கிராமத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்ணை அவர்களின் தோள்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இந்த மருத்துவர்கள் திகழ்வதாக புகழாரம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..!