சமூகத்திற்கு செவிலியர் ஆற்றும் பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக , உலக செவிலியர் தினம் மே 12ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் நாள் செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், உலக செவிலியர் தினத்தை ஒட்டி, புதுச்சேரி அரசு மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ஏராளமானோர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் அரசு இணைந்து ஆற்றும் பணியால் விரைவில் கரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மேலும், சுகாதாரத்துறையில் இந்திய அளவில் முன்னுதாரணமான மாநிலமாக புதுச்சேரி திகழ்வதற்கு செவிலியரின் அர்ப்பணிப்பே முக்கிய காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.
இதையும் பார்க்க: பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி கோரிய மனு தள்ளுபடி