குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
டெல்லியில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் கடந்த 13ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஜாமியா நகரில் நடைபெற்ற போராட்டம் சற்று தீவிரம் அடைந்ததால் மதுரா, நியூ ஃபிரண்டஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளின் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் மூன்று அரசு பேருந்துகள், இரண்டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் காவல்துறையினர் தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாணவர் சங்கம் களத்தில் இறங்கியதால், டெல்லியில் பதற்றம் நிலவி மெட்ரோ சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
தாங்கள் அமைதியாக போராட்டத்தை தொடங்கியதாகவும், இடையில் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக அடையாளம் தெரியாத சிலர் சேர்ந்ததால் போராட்டம் வன்முறையாக மாறியது என்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைஜாலுக்கு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டதை தொடர்ந்து போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
போராட்டம் காரணமாக நாளை டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: ஜம்மு காஷ்மீரில் பிரிவு 371 அமல்படுத்தப்படுமா! வதந்திகளை நம்பவேண்டாம் - உள்துறை அமைச்சகம்