கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "வங்கத்தில் வாழும் மக்களுக்கு நாங்கள் அரணாக செயல்படுவோம். மேற்கு வங்கத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டை செயல்படுத்த விடமாட்டோம். ஒரு மாநிலத்தில் வாழும் குடிமக்களை நீக்கும் உரிமை யாருக்கும் இல்லை" என்று முழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மேற்கு வங்கத்துக்கு தேசிய குடியுரிமை பதிவேடு தேவையில்லை. அது, இங்கு செயல்படுத்தப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், வாழும் இடத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை" என்றும் கூறினார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய அவர், இதன் மூலம் இங்கு வாழும் பலரை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்க முயல்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
"ஒருவர் வாக்களிக்கும் இடத்தில் குடியிருப்பது அவர்களின் அடிப்படை உரிமை. மேற்கு வங்கத்தில் உள்ள அமைதியை இந்த தேசிய குடியுரிமை பதிவேடு அழித்துவிடும். ஆகவே மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்தவிடமாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க: இருமாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு உணர்த்துவது என்ன?