பிகாரில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடக்க விழாவில் அம்மாநில முதலமைச்சரும், பாஜக கூட்டணிக்கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பிகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படாது எனவும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு எனப்படும் என்.பி.ஆர் பழைய முறையிலேயே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
தங்கள் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தாலும், என்.ஆர்.சி-ஐ அனுமதிக்காது எனத் திட்டவட்டமாக தெரிவித்த நிதீஷ் குமார், சிறுபான்மை மக்களின் உரிமையைக் காப்பதில், மாநில அரசு எந்தவித சமரசமும் கொள்ளாது என உறுதியளித்தார்.
மௌலான ஆசாத் உருது பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் புதிய விடுதிகள், கல்லூரி வளாகம் ஆகிவற்றுக்கு நிதீஷ் குமார் அடிக்கல் நாட்டினார்.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி தொடர்பாக பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சி.ஏ.ஏ-வை நேரடியாக எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. அதேவேளை பிராந்தியக் கட்சிகள் இவ்விவகாரத்தில் பல்வேறு விதமான நிலைப்பாட்டை எடுத்துவருவதால் என்.பி.ஆர்-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்கிறது.
இதையும் படிங்க: ட்ரம்ப் இந்திய வருகை: வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா?