பஞ்சாப் மாநில கல்வித் துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங், வியாழக்கிழமை (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மாநில அரசின் உத்தரவை மீறி பள்ளிக் கட்டணம் செலுத்த வலியுத்திய 38 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்டண விவகாரத்தில் மாநில அரசின் உத்தரவை மீறியவர்களுக்கு ஏற்கனவே நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க அவர்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருப்திகரமான பதிலை வழங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான போக்குவரத்துக் கட்டணம் மற்றும் புத்தகக் கட்டணங்களை மாணவர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது. இது தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே மார்ச் 23ஆம் தேதி விரிவான அறிவிக்கை வெளியிட்டுள்ளோம். ஆகவே கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற விஷயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த உத்தரவுகளுடன், நிலைமை இயல்புநிலைக்கு வந்தபின் கட்டணம் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் மாணவர்களுக்கு அவகாசம் வழங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த காலகட்டத்தில் மாணவர்களிடமிருந்து தாமதமாக கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்கக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.